மட்டக்களப்பு, கோவில்போரதீவு அருள்மிகு சித்திரவேலாயுதர் திருப்படைக்கோவில் பற்றிய ஓர் வரலாற்று நோக்கு


அறிமுகம்:
மட்டக்களப்புத் தேசத்தில் ஒரு நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டு சிறப்புடன் மிளிர்வது போரதீவுப் பிரதேசமாகும், இதனது ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுக் காலம் கிறிஸ்துவுக்கும்முன் முன்னூறு ஆண்டுகளைக் கடந்ததாக அமையும். கி.பி 11ஆம் நூற்றாண்டான சோழராட்சிக் காலத்தில் திருப்பணிசெய்யப்பட்ட இன்றைய திருப்படைக் கோவிலான கோவில்போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயம் போர்முனைநாடு சித்திரவேலாயுதர் ஆலயம் என அழைக்கப்பட்டமைக்கு மட்டக்களப்பு மான்மியம் மற்றும் மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் போன்றவை சான்றளிக்கின்றன. 1540வாக்கில் மட்டக்களப்புத் தேசத்தின் சிற்றரசுப் பொறுப்பினை ஏற்ற பணிக்கர்குல ஏந்தலான எதிர்மன்னசிங்கன் வெருகல் தொடக்கம் கதிர்காமம் வரையான நிலப்பரப்பை ஐந்து நிருவாக அலகுகளாகப் பிரித்தபோது இப்பிரதேசம் போர்முனைநாடு என வரையறை செய்யப்பட்டுள்ளமையும் அறியலாம். போர்முனை நாட்டின் முக்கிய கேந்திரஸ்தானமாக மிளிர்ந்தது இன்றைய பெரிய போரதீவாகும். சித்திரவேலாயுதர் ஆலயம் தோற்றம்பெற்று பல ஆண்டுகளின் பின்னர் அதன் முக்கியத்துவம் உணரப்பட்ட காலத்தே கோவிலை மையப்படுத்தியதாக மக்கள் குடியேறிய அப்பகுதி கோவில்போரதீவு எனும் பெயரைப் பெற்றிருக்க முடியும். இதனைப் பொதுவாக சில நூற்றாண்டுகள் முன்னோக்கிய காலமாகவே கொள்ள வாய்ப்புண்டு. இதுமுதல்கொண்டு  பண்டைய போரதீவு பெரிய போரதீவு என அழைக்கப்படலாயிற்று. 1824ல் மட்டக்களப்புத் தேசத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சாதிவாரியான கணக்ககெடுப்பில் பெரியபோரதீவு, கோவில்போரதீவு என இரு கிராமங்கள் அடையாளப்படுத்தப்படுவதால் அதற்கு முற்பட்ட காலமாகவே இதனைக்கொள்ளமுடியும்.

ஈழத்தின் கீட்பால் எழும் உதய ஞாயிறுபோல் பாலோடு தேனும் பாடும்மீன் பண்ணிசையும் வாழப் புகழ்சிறக்கும் மட்டுமாநகருக்குத் தென்பால் சுமார் 28 கிலோமீற்றர் தூரத்தில் - வெல்லாவெளிப் பாதையில் கோவிலும் குளங்களும் சூழ வங்கக் கடலின் அலைதொட்டு வாவிமகள் கட்டிய அழகான தொட்டிலென எழிலாகக் காட்சிதரும் பைந்தமிழ்க் கிராமமே கோவில்போரதீவு. 'வெற்றிபுனை மயூர சித்திர சங்காரவேல் வெள்ளை நாவற் பதியதாம்.......' எனும் குளக்கோட்டன் திருப்பணிக் கல்வெட்டுப் பாடலைக்கொண்டு சித்திரவேலாயுதர் கோவில்கொண்ட இத்திருத்தலம் வெள்ளைநாவலம்பதி என்ற சிறப்புப் பெயரையும் பெற்றுள்ளமையை அறியமுடிகின்றது.


அருள்மிகு சித்திரவேலாயுதர் திருத்தலம்:
ஓராறு படைவீடு ஒன்றாகவே கோவில்
போரேறு தீவமர்ந்தாய்
உம்பர்கள் தொழுதேத்த வள்ளியொடு தேவயானை
உடனாகக் கோவில் கொண்டாய்
சீரோடும் சிறப்போடும் நீவாழும் திருத்தலம்
பேர்பெற வேண்டுமையா
திக்கெட்டும் வாழ்தமிழர் இக்கட்டை போக்கிநிதம்
செவ்வேளே காத்தருளுவாய்! 
-கவிக்கோ வெல்லவூர்க் கோபால்-


தோற்றுவாய்: 
மட்டக்களப்புத் தேசத்தின் தேசத்துக் கோவிலாகவும் திருப்படைக் கோவிலாகவும் சோழப் பேரரசின் காலத்தில் மீளமைக்கப்பட்ட திருத்தலமாகவும் கலிங்க மாகோனின் ஆட்சிக்காலத்தில்  சீர்வரிசையைப்பெற்ற ஆலயமாகவும் வரலாற்றில் பேசப்படுகின்ற இவ்வாலயத்தின் தோற்றுவாய் குறித்து சரியான காலக்கணிப்பீட்டினை வெளிப்படுத்த முடியாதுபோனாலும் மட்டக்களப்பின் பூர்வீக ஏடுகள்தரும் தகவல்களின் அடிப்படையில் இதன் வரலாற்றுக் காலத்தை தீர்மானிப்பதே இன்றைய நிலையில் பொருத்தமானதாக அமையும். இதன்படி மட்டக்களப்பு பூர்வ சரித்திர ஏடுகளின் (நான்கு ஏடுகள்) தகவல்கள் பின்வருமாறு அமையும்.

கி.பி 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியை மையப்படுதியதாக (கி.பி 1013) சொல்லப்படும் - மட்டக்களப்பின் அரசுப்பொறுப்பிலிருந்த – 'மதிசுதனுக்கு பத்தாண்டுகளாக புத்திரபாக்கிய மின்மையால் கி.மு 4ஆம் நூற்றாண்டுவாக்கில் மண்டுநாகன் பகுதியில் நாகர்களால் வழிபாடியற்றப்பெற்று பின்னர்  காலசேனனால் அழிக்கப்பட்டு பாழடைந்துகிடந்த முருகையன் ஆலயத்தினை  நேர்பண்ணக்கருதி தொண்டைநாட்டுச் சிற்பிகளை அழைத்துவந்து அந்தணர் ஆலோசனைப்படி ஐந்து தட்டுத் தூபியும் கோபுர வாசல், வாகன வீடு, ரதசாலை, மூன்று சுற்று மதில்கள், தங்கத்தகடு பூட்டிய கொடித்தம்பமும்மிட்டுத் தங்கக் குடமும் தூபியின்மேல் நிறுத்தி அபிஷேகமும் செய்வித்து அந்தணர் இருபாகையும் அவர்களுக்கு முதன்மையும் - முதன்மைக்குச் சிறைகளும் வகுத்து பூசாரம்பம் நடைபெறச்செய்து சித்திரவேல் ஆலயமென்றும் அந்தப் பகுதிக்கு போர்முடை நாடு என்றும் மண்டுநாகன் இருந்த இடத்திற்கு மண்டுநாகன்சாலை என்றும் நாமம் சூட்டி குடிகளையிருத்தி அரசுபுரிந்துவர அவன் மனைவிக்கு புத்திர சந்தானமுண்டாகி ஒரு புத்திரன் பிறந்தான். அப்புத்திரனுக்கு நாதன் என்னும் நாமம் சூட்டி வளர்த்து வாழ்ந்துவரும் காலம் நாதன்பேரால் மதிசுதனும் சித்திரவேல் ஆலயத்திற்கு ஆதாரமாக ஆயிரம் அவுணக் கழனிகள் திருத்தி (சுமார் 2000 ஏக்கர்) செந்நெல் குறைவின்றி விளையும்படி மேட்டுநீரைத் தகைய ஒரு அணையும்கட்டி மதகுவைத்துக் கழனிகளுக்குப் பாயச்செய்து அதற்கு நாதன் அணையென்றும் அவ்விடத்திற்கு வேலர்வெளியென்றும் (ஒரு ஏட்டில் இது வேலாயுதர்வெளியென குறிப்பிடப்படுகின்றது) நாமஞ்சூட்டி சித்திரவேல் ஆலயத்திற்கு ஈந்தான்'

மேற்சொன்ன தகவல்களின் உண்மைத்தன்மையானது இதுவரை இவ்வாலயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சோழராட்சியைத் தொடர்ந்த காலம்முதல் நிலைநிறுத்தப்பட்டபோதும் இதன் தொடக்க வழிபாடுபற்றிய பலதரப்பட்ட வாய்மொழி மூலங்கள் இன்னும் ஆய்வுக்குரியனவாகவேயுள்ளன. இதனிடையே திருச்செந்தூரில் இடம்பெற்ற முருகனது சூரசம்காரத்தின்போது முருகனது வேல்களில் ஒன்று பெரும் சீற்றத்துடன்வந்து இங்கிருந்த வெள்ளைநாவல் மரத்தில் தரித்ததாகவும் அதன்காரணமாகவே வெள்ளைநாவலம்பதி என்ற பெயரினை இக்கிராமம் பெற்றதாகவும் இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக நம்பிக்கைகொண்டுள்ளமையையும் பார்க்கின்றோம்.

இதனிடையே பிறிதொரு ஐதிகமும் இவ்வாலய வரலாறுகுறித்துப் பேசப்படுவதைப் பார்க்கின்றோம். மிக நீண்ட காலத்திற்கு முன்னர் இந்தியாவைச் சேர்ந்த கொங்கணமுனி என்பவர் கொண்டுவந்த ஏழு சிவலிங்கங்களில் ஒன்று வெள்ளைநாவற்பதியில்வைத்து பூசிக்கப்பட்டதாக அதன்வரலாறு கூறும். இங்கு ஆதித் தமிழர் வழிபாடான வேல் வழிபாடே முக்கியத்துவம் பெறுவதால் இக்கூற்று பொருத்தமற்றதாகவே அமையும். பொதுவாக பார்க்கும் தன்மையில் ஆய்வுரீதியில் இதனது வரலாற்றுக்காலத்தை கி.பி 11ம் நூற்றாண்டின் முற்பகுதிமுதல் நிலைநிறுத்தக்கூடிய தகவல்களையே நம்மால் இதுவரை பெறவும் முடிகின்றது.

கி.பி 11ஆம் நூற்றாண்டில் சோழராட்சியில் திருப்பணிசெய்யப்பட்ட இத் திருத்தலம் பின்னர் கி.பி 13ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகோனின் நிர்மாணப்பணிகளை பெற்ற ஆலயமாகவே கொள்ளப்படுகின்றது. கூடவே குளக்கோட்டனால் திருக்கோணேஸ்வரம் தொடக்கம் கதிரமலை வரை சீர்வரிசை செய்யப்பட் ஏழு திருத்தலங்களில் இவ்வாலயமும் வெள்ளைநாவற்பதியென்ற பெயரால்  இடம்பெறுவதை பின்வரும் குளக்கோட்டன் திருப்பணிக் கல்வெட்டுப் பாடல்மூலம் உணரமுடிகின்றது.
சீர்மேவு இலங்கைபதி வாழ்வுதரு செல்வமும்
சிவனேச இருசமயமும்
செப்புதற் கரிதான மாணிக்க கங்கையும்
செகமேவு கதிரமலையும்
ஏர்பெறும் தென்கயிலை வாழ் கோணலிங்கம்
மேன்மைதான் தோன்றிலிங்கம்
வெற்றிபுனை மயூர சித்திர சங்காரவேல்
வெள்ளைநாவற் பதியதாம்
பேர்பெறும் தென் திருக்கோயில் சிவாலயம்
சிவபூசை தேவாரமும்
செய்முறைகள் என்றென்றும் நீடூழி காலமும்
தேசம் தளம்பாமலும்
ஏர்பெருகு பரிதிகுல ராசன்குளக் கோட்டன்
எவ்வுலகும் உய்வதாக
எழுகோபுரம் கோயில் தொழுவார் தினம்தேட
எங்கெங்கு மியற்றினாரே!

கி.பி 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதி அளவில் மீண்டும் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டமையை இவ்வாலய மூலஸ்தான படிக்கட்டில் பொறிக்கப்பட்ட சாசனம்மூலம் உணரமுடிகின்றது. இதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த செட்டியார் ஒருவர் மேற்கொண்ட திருப்பணிகுறித்து அறியமுடிகின்றது. அதில் பொறிக்கப்பட்ட வாசகம் முன்னர் தென்னிந்தியா காரைக்குடி நாகப்பசெட்டி என்பவரால் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டதை வெளிப்படுத்துவதாகவே கருதப்பட்டிருந்தது. பின்னர் 2012ல் பேராசிரியர் பத்மநாதனுடன் இப்பகுதிக்கு வரவுதந்த தமிழகத்தின் கல்வெட்டாய்வுக் குழுவினரின் பரிசீலனைக்குப்பின்னர் தற்போது இதன் மீள்வாசிப்பானது 'கயிலாசநாதர் மகன் நாகப்பச்செட்டி உபயம், பிராமணர் பராமரிப்பு' எனப் பொருள்படுவதை வெளிக்கொணர்ந்துள்ளனர்.

இதில் பிராமணர் பராமரிப்பு என பொறிக்கப்பட்ட வாசகம் மிகுந்த அவதானிப்புக்குள்ளாகின்றது. கி.பி 11ஆம் நூற்றாண்டில் சோழராட்சியில் பிராமணரின் பூசைமுறைக்குள் உள்ளீர்க்கப்பட்ட இவ்வாலயம் கி.பி 13ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகோனால் புகுத்தப்பட்ட வீரசைவ நடைமுறைகளை பின்பற்றிய தன்மையில் அதுமுதல்கொண்டு பிராமணரின் பராமரிப்பிலிருந்து விடுபட்டிருக்கவே வாய்ப்பேற்பட்டிருக்கும். இதன் காரணமாகவே இவ்வாலயத் திருப்பணிகளை மேற்கொண்ட செட்டியார் தனது வல்லமையால் மீளவும் பிராமணரின் நடைமுறைக்குள் இச்சாசனத்தின்மூலம் இதனை நிச்சயப்படுத்தியுள்ளார் எனவும் நம்பமுடிகின்றது.

இவ்வாலய வரலாற்றில் 1910க்கு பின்னரான காலப்பகுதி ஒரு தளர்வுற்ற காலமாகவே குறிப்பிடப்படுகின்றது. இவ்வாலயத்திற்குரிய பெருமளவு வயற்காணிகள் படிப்படியாக பறிபோன நிலையிலும், 1907ல் மட்டக்களப்பில் வீசிய பாரிய சூறாவளியைத் தொடர்ந்து பின்னர் மழைகுன்றி ஒரு சில வருடங்கள் தொடராக இடம்பெற்ற பாரிய வரட்சியிலும் நெற்செய்யை குன்றி ஆலய வருமானம் போதிய நிலையில் இல்லாதிருந்ததுவும் அதனைத் தொடர்ந்து வண்ணக்குப் பொறுப்பிலிருந்த களுவாஞ்சிக்குடி கவுத்தன்குடி வண்ணக்கர் தனது ஒத்துழைப்பை விலக்கிக்கொண்டதும் இதற்கு முக்கிய காரணமாய் அமையலாம். 1934ல் மட்டக்களப்பு உயர்நீதி மன்றத்தில் இவ்வாலய நிருவாகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்கில் 1935ல் மாவட்ட நீதிபதி திரு.பி.வைத்தியலிங்கம் அவர்கள் ஒரு நிருவாக செயல்பாட்டு முறைகளுடன் அளிக்கப்பட்ட தீர்ப்பினைத் தொடர்ந்து அதுவும் சரியான செயல்பாட்டை எட்டாமையால்  1942ல் திரு.எஸ்.யூ.எதிர்மன்னசிங்கம் (இவர் பட்டிருப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர்) மேற்கொண்ட முயற்சியில் அவரது தலைமையில் தேசம் கூட்டப்பட்டு இவ்வாலயச் செயல்பாட்டை மீளவும் சிறப்பாகக் கட்டமைக்கவேண்டி ஒரு நிருவாகக் கட்டமைப்பு உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் களுவாஞ்சிக்குடி கவுத்தன்குடியினர் கலந்துகொள்ளாத நிலையிலும் ஒத்த கருத்துகள்  எட்டப்படாத தன்மையிலும் அது ஒத்திவைக்கப்படலானது. அதன்பின்னர் கூட்டப்பட்ட பொதுச்சபையில் நீண்டகால மரபுவழிப்பட்டு முகாமைத்துவ தலைமைப் பொறுப்பிலிருந்துவந்த பணிக்கர் வம்மிசம் சார்ந்த பெரியபோரதீவு பணிக்கனார்குடி கேசவப்போடி மார்க்கண்டு தலைமையில் ஒரு நிருவாகக் கட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டு ஆலய நடைமுறைகள் செயல்படத்தொடங்கின. இதன் தொடர்ச்சியாக இவ்வாலயம் ஓரளவு புனரமைப்புச்செய்யப்பட்டு களுவாஞ்சிக்குடி கவுத்தன்குடியினரும் இணைப்புற  1974ல் மட்டக்களப்புத் தேசத்தில் முதல் முறையாக 33 ஓம குண்டலங்களுடன் யாழ்ப்பாணம் பிரம்மசிறி வை.மு.குமாரசுவாமி குருக்கள் தலைமையில் மிகச் சிறப்பாக குடமுழுக்குக் கண்டது.

02: நிருவாகக் கட்டமைப்பு:

இவ்வாலயத்தின் ஆரம்பகால நிருவாகக் கட்டமைப்பு தொடர்பில் சரியாகக் கண்டறிய முடியவில்லை. எனினும் இதன் மீளமைப்புத் தொடக்கமான சோழராட்சிக் காலத்தில் இவ்வாலயம் மிகுந்த முக்கியத்துவம்பெற்ற திருத்தலமாகக் கொள்ளப்பட்ட தன்மையில் சோழர்களது கோவில் நிருவாக முறைகளையே பின்பற்றியிருக்கமுடியும். அவர்களது நேரடிப் பொறுப்பில் மட்டக்களப்பை நிருவகித்த சிற்றரசர்களது பராமரிப்பில் இவ்வாலயம் இருந்ததாகவே கருதமுடியும். அதன்பின்னர் முதலாம் விஜயபாகுவின் ஆட்சிக் காலம் முதல் (1070) கலிங்க மாகோன் தனது ஆட்சி நிருவாகக் கட்டமைப்பை நிலைநிறுத்தும்வரை சுமார் 145 ஆண்டுகள் சோழர்தம் நிருவாகக் கட்டமைப்பே பெரும்பாலும் இங்கு பின்பற்றப்பட்ட தன்மையில் கி.பி 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை அது தொடரவேசெய்திருக்கும்.

கலிங்க மாகோன் ஆலய நடைமுறைகளோடு கூடியதான சமூகக் கட்டமைப்பு முறைகளிலும் வழிபாட்டியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக விளங்கியநிலையில் மட்டக்களப்புத் தேசத்தின் வன்னிமை முறைகளையும் குலவிருதுகளையும் சாதியாசாரங்களையும் கோயில் ஊழியங்களையும் அவற்றோடு ஒட்டியே செயல்படுத்தினான். அவனால் தேசத்துக் கோவிலாக வரையறைசெய்யப்பட்ட இவ்வாலயமும் அவனது நடைமுறைகளையே முழுமையாக பின்பற்றியதெனலாம். அதனைத் தொடர்ந்து அவனால் நியமிக்கப்பட்ட வன்னிமைகள் மட்டக்களப்புத் தேசத்தின் அனைத்து முக்கிய ஆலயங்களினதும் செயல்பாடுகளில் முதன்மை பெற்றவர்களாக விளங்கினர். இந்நடைமுறைகள் தொடர்ந்தும் ஆங்கிலேயர் ஆட்சிவரை நீடிக்கவே செய்தது.

02.01: தலைமைத்துவம்:

கி.பி 14ம் நூற்றாண்டின் பிற்பகுதிமுதல் மன்னம்பிட்டி – வெருகல் தொடக்கம் கதிர்காமம் வரையான  மட்டக்களப்புத்தேசம் கண்டி அரசின்கீழ் கொண்டுவரப்பட்டதுமுதல் ஏறாவூர், மண்முனை, மட்டக்களப்பு (சம்மாந்துறை), உன்னரசுகிரி என நான்காக வகுக்கப்பட்டு இவற்றின் நிருவாக தலைமைப் பொறுப்புகள் நான்கு  திக்கதிபர்களின்கீழ் கொண்டுவரப்பட்டது. கி.பி 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கலிங்க குலத்தைச்சேர்ந்த பங்குடாவெளி கண்ணாப்போடியை மாருதசேனன் என்ற பெயரில் மட்டக்களப்புத் தேசம் முழுமைக்கும் நியம அதிபனாக கண்டியரசு நியமித்தது. அவனது காலத்தில் சகல நிருவாகப் பொறுப்புகளிலும் கலிங்கக் குடியினர் முன்னுரிமைபெற்றிருந்தனர். அதன் பின்னர் 1540 வாக்கில் அவனது மகனும் தாய்வழிப் பணிக்கர் குலத்தவனுமான எதிர்மன்னசிங்கன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டான். அவன் மட்டக்களப்புத் தேசத்தை ஏறாவூர், மண்முனை, போர்முனைநாடு, மட்டக்களப்பு (சம்மாந்துறை), உன்னரசுகிரி என ஐந்து நிருவாகப் பிரிவுகளாகப் பிரித்து நிருவகிக்கலானான். இவனது ஆட்சிக் காலத்தில் சமூக நிலையிலும் ஆலய நடைமுறைகளிலும் அவனது பணிக்கர் குலத்தினர் மிகுந்த முன்னுரிமைபெற்றனர். மட்டக்களப்புத் தென்பகுதியில் இவர்களே முன்னீடுகாரரெனும் உயர்வினைப் பெற்றனர்.  மட்டக்களப்புத் தேசத்துக் கோவில்களில் முதன்மைபெற்ற இரண்டு திருப்படைக் கோவில்களான திருக்கோவில் சித்திரவேலாயுதர் ஆலயம் மற்றும் கோவில்போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயம் ஆகியவை முகாமைத்துவ நிருவாகச் செயல்பாட்டில் பணிக்கனார்குடியின் தலைமைத்துவத்திற்குரியனவாக மாற்றப்பட்டன. இவற்றின் பின்னணியில் கடந்த 450 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயத்தின் முகாமைத்துவத் தலைமைப்பொறுப்பு போர்முனைநாட்டின் தொடக்ககாலப் பணிக்கர் வம்மிசத்தாரை சார்ந்ததாகவே அமையும். இதன் அர்த்தப்பாடு யாதெனில் போர்முனை நாட்டின் கேந்திர ஸ்தானமாகக்கொள்ளப்பட்ட பெரியபோரதீவு பணிக்கனார் குடியினரை மையப்படுத்தியதாக இதனைக்கொள்ளலாம். மட்டக்களப்புச் சமூக வரலாற்றில் போரதீவு வயிற்றுவார் என இவர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

02.02: வண்ணக்கு முறை:

வண்ணக்கு அல்லது வண்ணக்கர் முறை மட்டக்களப்புத் தேசத்திற்குரிய தனித்துவமாகும். இச் சொற்பிரயோகம் தமிழ்மொழியில் பயின்றுவந்ததொன்றல்ல. தமிழகத்திலோ அல்லது யாழ்ப்பாணத்திலோ இவ்வாறான நடைமுறை இன்றும்கூட இடம்பெறவில்லை. கி.பி 1ஆம் நூற்றாண்டில் திருக்கோவில் ஆலயத்தின் பணிகளுக்காக (அரனூழியம்)  வேளாளர் தமிழகத்திலிருந்து அழைத்துவரப்பட்டதாக வரலாறு கூறும். பிற்பட்ட காலப்போக்கில் ஆலய வழிபாட்டியலோடு நெருக்கமுற்ற - சிறைக் குடிகளின் கடமைகளை ஒருங்கிணைத்து மேற்பார்வைசெய்யும் மட்டக்களப்புப் பிரதேச சிறப்புவாய்ந்த ஒரு சமூகக் கடமையும் இவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது. இதுவே 'புறக்கடமை' என்ற பெயரைப் பெறுவதாயிற்று. இக்கடமைகளை சிறப்பாக மேற்கொள்ளும்பொருட்டு அவர்களுக்கு செய்கை பண்ணுவதற்காக கோவில் காணிகளும் வழங்கப்பட்டன. இது தொடர்பில் முழுமையான ஆய்வினை மேற்கொண்ட இலண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி டெனிஸ் கில்வாரி(Prof. (Dr.) Dennis B mc Gilvary – Mukkuvar Vannimai) தனது ஆய்வு நூலில் பின்வருமாறு கூறுகின்றார்.
 “….. The South Indian evidence of Velalar religious connection is consistent with the traditions of Velalar settlement in the Batticaloa region, which assert that Velalars were brought from India and installed as Saivite temple functionaries in perpetuity by Local Kings. They were not given ownership or control of the temples, but they were given responsibility for overseeing the conduct of temple ritual, and they cultivated a share of the temple lands as payment of their services. “

மட்டக்களப்புத்தேச வரலாற்றில் இத்தகைய நடைமுறை தொடக்கத்தில் திருக்கோவில் சித்திரவேலாயுதர் ஆலயத்தில் கோரக்களப்பிலிருந்த கண்டன்குடி வேளாளரைக்கொண்டும் அடுத்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தில் பழுகாமத்து அத்தியா குடியினரைக்கொண்டும் அதைத்தொடர்ந்து கோவில்போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயத்தில் களுவாஞ்சிக்குடி கவுத்தன் குடியினரைக்கொண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை ஆய்வுகளின் வெளிப்பாடாக அமைகின்றது. பிற்பட்ட காலத்தே (கி.பி 18ஆம் நூற்றாண்டு) நாதனை  முதலாவது வன்னியனுடைய வாரிசுகளான களுவாஞ்சிக்குடி பட்டணக்குடியினரும் இவ்வாலயத்தின் நடைமுறைக்குள் உள்வாங்கப்படுகின்றனர். பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி கவுத்தன் குடி மற்றும் பட்டணக் குடியினர் பதினான்குபேர் இவ்வாலயத்தில் முன்னர் வண்ணக்கர்களாகத் பதவி வகித்துள்ளமையும் இறுதியாக ஞானமுத்து ஓவசியர் மற்றும் கதிரேசபிள்ளை ஆகியோர் பதவிவகித்துள்ளமையும் தெரியவருகின்றது.
இதேபோன்று அகக்கடமை எனப்படும் உள்வேலைகளை செவ்வனே நிறைவேற்றும் பணி கோவிலார் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதற்காக இவர்களுக்கும் பணிக்கான கூலி வழங்கப்பட்டது. இதில் அவர்கள் மேற்கொள்ளும் பணியை மேற்பார்வைசெய்து நெறிப்படுத்த அவர்களில் ஒரு பிரிவினரில் மேற்பார்வையாளரும் நியமிக்கப்பட்டார். காலப்போக்கில் இது இவ்வாலயக் கோவிலாரில் கங்காணிப் (கண்காணி) பிரிவாகவும் கபடாக்காரர் பிரிவாகவும் தோற்றம்பெறலாயிற்று.

இதில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது யாதெனில் தேசத்துக் கோவில்களின் செயல்பாட்டில் தேசத் தலைமைத்துவம் அப்பிரதேச வன்னியனாரையும் ஆலய முகாமைத்துவ அதிகாரம் என்பது அதன் தலைமைப் பொறுப்பைச் சார்ந்ததாகவும் அமையும். அத்தோடு தேச உரிமையானது அதற்கென உரித்தாக்கப்பட்ட பிரதேசம் அல்லது கிராமங்கனைச் சார்ந்ததாக அமையும். நமக்குக் கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் இவ்வாலயத்தின் நிருவாகச் செயல்பாட்டில் தலைமைத்துவம் பெரியபோரதீவு பணிக்கனார்குடி வயிற்றுவாரைச் சார்ந்ததாக அமைய ஆலயத்தை சூழவுள்ள மகிளுர், எருவில், களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு, பெரியபோரதீவு, பளுகாமம், கோவில்போரதீவு, வெல்லாவெளி ஆகிய கிராமங்களைச் சார்ந்த சமூகங்கள் அதன் தேசத்து உரிமையைப் பெற்றன. இதனடிப்படையிலேயே மூன்றுகாலப் பூசைகளைக்கொண்டிருந்த இவ்வாலயத்தில் வருடாந்த 21நாள் திருவிழாக்கள் பிரதேசத்துக்கு உரித்தான அனைத்துச் சமூகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் பண்டிதர் வி.சி.கந்தையா அவர்களால் எழுதப்பட்டு பிரதேச அபிவிருத்தி அமைச்சின் இந்து சமயத் திணைக்களத்தால் 1983ல் வெளியிடப்பட்ட 'மட்டக்களப்பு சைவக் கோவில்கள்' நூல் சில முக்கியமான தகவல்களைப் பதிவாக்கியுள்ளமையை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இதில் கொடீயேற்றத்துடன்கூடிய நான்கு நாட்களும் ஆலயம் சார்பிலும் 5ந்தாம் நாள் திருவிழா வேளாளர் சார்பிலும் அதன்பின்னர் தொடர்ந்தாற்போல் பறையர், வண்ணார், தட்டார், சிங்களக் குடியினர், கோபி குடியினர், கச்சிலார் குடியினர் மற்றும் மாதவி குடியினரும் 12,13,14ஆம் திருவிழாக்கள் படையாட்சி குடியினராலும் 15, 16ஆம் திருவிழாக்கள் காலிங்கா குடியினராலும் 17, 18, 19ஆம் திருவிழாக்கள் பணிக்கனார் குடியினராலும் 20ஆம் நாள் திருவிழா செட்டிகுடியினராலும் செய்யப்பட்டு மறுநாள் அதிகாலை திருவேட்டைத் திருவிழா முடீவுற்ற பின்னரான 21ஆம் நாள் தீர்த்தத் திருவிழாவானது ஆலயம் சார்பிலும் செய்யப்பட்மையை அறியமுடிகின்றது. இதில் திருவேட்டைத் திருவிழாவானது இப்பகுதி வேடவேளாளர்களால்  செய்யப்பட்ட தகவல்களும் பெறப்படுகின்றன. காலப்போக்கில் இத்திருவிழாக்கள் 10 நாட்களாக குறைவுபட்டமையும் கவனத்தில் கொள்ளப்படத்தக்கதே. இதன் விசேட பூசைகள் சில குறிப்பிட்ட குடிவழியினரால் தொடர்ந்தாற்போல் செய்யப்பட்டு வருவதுவும் கவனத்துக்குரியது. சித்திரைப் பௌர்ணமி கச்சிலார் குடியினராலும் கார்த்திகை விளக்கீடு எருவில் பணிக்கனார் குடியினராலும் திருவெம்பாவை பெரியபோரதீவு பணிக்கனார் குடியினராலும் திருவாதிரை மகிழூர் பணிக்கனார் குடியினராலும் விழாவாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் 20ஆம் நாள் திருவிழாவான செட்டிகுடித் திருவிழா 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆலயத்தை மீள்நிர்மாணம்செய்த நாகப்ப செட்டியாரின் உபயமாக இருந்து பின்னர் செட்டி வம்சத்தின் (குடி) முன்னீடானதாக கள ஆய்வில் தகவல்கள் பெறப்படுகின்றன.

02.03: நிருவாக மாற்றங்கள்:

நாம் மேற்கொண்ட ஆய்வுகளில் 1910 வரையான காலத்தே இவ்வாலயச் செயல்பாடுகள் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாகவும் மூன்றுகாலப் பூசைகள் மற்றும் விசேடதின நிகழ்வுகளுடன்  21 நாட்களைக்கொண்ட வருடாந்த திருவிழாக்கள் வெகு விமர்சையாகவும் இடம்பெற்று வந்திருக்கின்றன. அதனைத் தொடர்ந்த காலத்தே சில ஆண்டுகள் மழைகுன்றி வரட்சி நிலவியதால் கோவில் விளைநிலங்கள் மூலம் பெறப்பட்ட வருமானம் நலிவுற்று ஆலயச் செயல்பாடுகள் தளர்வுற்ற நிலையில் ஆலயத்தின் முக்காலப் பூசைகள், விசேட தினங்கள் மற்றும் வருடாந்தத் திருவிழா போன்றவற்றை செவ்வனே நடாத்தும் நிலை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதே கால கட்டத்தில் வண்ணக்கர் எனும் புறக்கடமைப் பொறுப்பிலிருந்த களுவாஞ்சிக்குடி கவுத்தன்குடி மற்றும் பட்டணக்குடியினரின் பங்களிப்பு படிப்படியாக செயலிழக்கலானது. இதிலுண்டான பிணக்குகள் காரணமாகப் பின்னர் இது முற்றாகவே நின்றும்போனது. இதன்பின்னர் முகாமைத்துவத் தலைமைப் பொறுப்பிலிருந்தவர்களே தங்கள் கடமைகளுடன் வண்ணக்கரது செயல்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டிய அவசியத்துக்கு உள்ளானார்கள். இதுவே அதிகாரம்பெற்ற வண்ணக்கர்களாக அவர்களை நிலைநிறுத்தியது.

1930ம் ஆண்டுகள்வரையான பிற்பட்ட காலத்தில் இதன் முகாமைத்துவத் தலைமைத்துவம் தொடர்பில்  பெரியபோரதீவு பணிக்கனார் குடியின் தாய்வழி மருமக்கள் முறையைச் சார்ந்தவர்களான திரு.இளையாப்போடி, திரு.பாலிப்போடி உடையார், திரு.சின்னத்தம்பி உடையார், திரு.வீமாப்போடி ஆசிரியர், திரு.பெரியதம்பி உடையார் போன்றவர்கள் அறியப்படுகின்றார்கள். 1930களின் பின்னர்  திரு.பெரியதம்பி உடையாரின் உடல்நலக்குறைவு காரணமாக அவரது கடமைகளை நிறைவேற்றும் பணியில் அவரது மகனும் பெத்தான்குடியைச் சார்ந்தவருமான திரு. சின்னத்தம்பி உடையார் அவர்கள் ஒரு நீண்டகாலம் செயல்படலானார். இச்செயல்பாடானது பின்னர் பணிக்கினார்குடித் தலைமைத்துவத்தோடு பெத்தான்குடியும் இணைப்புறும் தன்மைக்கு அடிகோலியது எனலாம்.

இதன்பின்னர் பெரியபோரதீவு பணிக்கனார் குடியைச்சேர்ந்த திரு.கே.மார்க்கண்டுப்போடி அவர்களது தலைமையில் உருவாக்கப்பட்ட நிருவாகக் கட்டமைப்பு பல ஆண்டுகளாக செவ்வனே நடைபெறாது முடங்கிக்கிடந்த ஆலயச் செயல்பாடுகளை மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணிக்கு முகம்கொடுக்கவேண்டியதாயிற்று. இவரது காலத்தே வரலாற்றுச் சிறப்புமிக்கதான இவ்வாலயக் குடமுழுக்கு விழாவானது களுவாஞ்சிக்குடி கவுத்தன்குடி வண்ணக்கரும் இணைவுற்ற தன்மையில் 1974ல் மட்டக்களப்புத் தேசம் காணுகின்ற பெரும் பாக்கியத்தைப் பெற்றதெனலாம். இதன்பின்னர் நிருவாகத் தலைமைத்துவ முரண்பாடுகள் காரணமாக களுவாஞ்சிக்குடி கவுத்தன்குடியினர் மீண்டும் தங்கள் ஒத்துழைப்பினை விலக்கிக்கொண்டனர். பின்னர் மகிழூர் பெத்தான்குடியைச் சார்ந்த ஒருவருக்கு தலைமைத்துவத்தில் இணைந்ததான வண்ணக்கர் பதவி தரப்படவேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் திரு மார்க்கண்டு அவர்கள் தற்செயலாக பதவிவிலக நேரிட்டதைத் தொடர்ந்து மார்க்கண்டு வண்ணக்கருக்குப் பின்னர் மகிழூரைச்சேர்ந்த திரு.வேலுப்பிள்ளை பாலகப்போடி அவர்கள் வண்ணக்கராக மாவட்ட நீதிமன்றத்தால் நியமனம் பெற்றார். அதன் பின்னர் பெரியபோரதீவுப் பணிக்கனார்குடி சார்பில் திரு.கந்தையா சோமசுந்தரமும் வண்ணக்கராக நியமனமானார். பின்னர் மாவட்ட நீமன்றத்தில் பொதுமக்கள் சார்பில் ஆலய நிருவாகக் குறைபாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு வழக்கில் 1983 முதல் பிரதேசச் செயலாளரின் வழிப்படுத்தலில் ஆலய நிருவாகம் செயல்படவேண்டுமென்ற முடிவினை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பாக வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து பெரியபோரதீவு பணிக்கனார்குடிசார்பில் திரு. கந்தையா சோமசுந்தரத்துடன்; திரு.கனகரெத்தினம் தட்சனாமூர்த்தியும்; இணைந்து வண்ணக்கர்களாக சிறிதுகாலம் செயல்பட்டனர். போர்க்காலச் சூழலில் திரு பாலகப்போடியும் திரு.சோமசுந்தரமும் மரணமடைய திரு.தட்சணாமூர்த்;தியும் இடம்பெயரலானார். இதன்பின்னணியில் மீண்டும் ஆலயச் செயல்பாடுகள் தளர்வுற சில ஊர்மக்களின் வேண்டுகோள் நிமித்தம் பெரியபோரதீவு பணிக்கனார்குடியைச்சேர்ந்த திரு.சின்னையா பெரியதம்பி வண்ணக்கராகச் சில ஆண்டுகள்  செயல்படலானார். அதற்கு பிற்பட்ட  காலகட்டத்தே பலரது வேண்டுகோளுக்கமைய மீண்டும் களுவாஞ்சிக்குடி வேளாளர் சார்பில் திரு.க.ஆத்மசிங்கம் அவர்கள் வண்ணக்கராக தெரிவான நிலையில் அவர்களுக்கான சரியான உரிமைகள் வழங்கப்படவில்லை என்ற காரணத்தை முன்வைத்து ஒரு சில ஆண்டுகளில் அவர் தனது ஒத்துழைப்பை விலக்கிக்கொண்டார்.

திரு பெரியதம்பியின்  மரணத்தின்பின்னர் கூடிய பொதுச்சபை பெரியபோரதீவு பணிக்கனார்குடி திரு.கணபதிப்பிள்ளை கிருபைராசா அவர்களை வண்ணக்கராகத் தெரிவுசெய்ததோடு அவரது தெரிவினை மாவட்ட நீதிமன்றமும் அங்கீகரித்திருந்தது. அதே காலகட்டத்தில் திரு.த.தங்கராசா அவர்கள் பெத்தான்குடி சார்பில் இணை வண்ணக்கராக செயல்படும் வாய்ப்பினைப்பெற்றார். திரு. கிருபைராசாவின் காலத்தில் ஆலய மீளமைப்புப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன. எனினும் பெருமளவு திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் ஒருசில காரணங்களுக்காக அவர் பதவிவிலக நேரிட்டதைத் தொடர்ந்து அவரது நெருங்கிய உறவினரும் அதே குடியைச் சேர்ந்தவருமான திரு.கனகரெத்தினம் கனகசுந்தரம் அவ்விடத்திற்கு பொதுச்சபையால் நியமிக்கப்பட்டார். அவ்வாலய நிர்வாகச் செயல்பாட்டை முறையாக முன்னெடுக்கமுடியாத வழமையான சூழ்நிலையில் அவர் அதிலிருந்து ஒதுங்கிக்கொள்ள பொதுச்சபையானது மீண்டும்கூடி பெரியபோரதீவுப் பணிக்கனார்குடி சார்பில் திரு.க.தினகரன் அவர்களையும் பெத்தான்குடி சார்பில் திரு.ஞா.குமரப்போடி அவர்களையும் தெரிவுசெய்ய மாவட்ட நீதிமன்றமும் அதனை அங்கீகரித்தது. அண்மைக்கால வரலாற்றில் பல்வேறு நிருவாகச் சிக்கலுக்குள் தொடராக முகங்கொடுத்துவந்த இத்தேசத்தினுடைய முக்கிய திருப்படைக் கோவிலான இத்திருத்தலத்தில் இன்று போரதீவுப்பற்று பிரதேசச் செயலாளரின் வழிப்படுத்தலில் 31.08.2017ல் மிகச் சிறப்பாக குடமுழுக்கு இடம்பெற்றுள்ளமை இப்பிரதேச மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமையுமென நம்பலாம். அதன் பழமைமிக்க பெருமைகள் மீண்டும் நிலைபெற முருகன் அருளை வேண்டுவோம்.

கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவன்
கோவிலூர் முருகனம்மா – அவனைக்
கும்பிட்டு உங்கள்மனக் குறைகளைக் கூறுங்கள்
கவலைகள் தீருமம்மா! 

தீராத வினையெல்லாம் தீர்த்திடவே கந்தன்
போரேறு தீவமர்ந்தான் - ஓம்
சரவணபவ என்று ஒருதரம் சொல்லுங்கள்
சண்முகன் கண்முன் நிற்பான்!
-கவிக்கோ வெல்லவூர்க் கோபால்-
மட்டக்களப்பு, கோவில்போரதீவு அருள்மிகு சித்திரவேலாயுதர் திருப்படைக்கோவில் பற்றிய ஓர் வரலாற்று நோக்கு மட்டக்களப்பு, கோவில்போரதீவு அருள்மிகு சித்திரவேலாயுதர் திருப்படைக்கோவில் பற்றிய ஓர் வரலாற்று நோக்கு Reviewed by Viththiyakaran on 8:27 PM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.