புகை பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் 10

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

  1. பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.
  2. சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியாது.
  3. சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக்கொள்ளலாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.
  4. அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்து விடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும் . பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.
  5. வீட்டில் இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை சின்னக் குழந்தைகள் விரும்பி எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு வேறு விளையாட்டுப் பொருட்கள் வாங்கத் தேவையில்லை.
  6. புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையை பார்க்கும் போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும்.
  7. எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய் விடும்.
  8. சிகரெட் பிடித்து லொக் லொக் கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கலாம். பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.
  9. வாழ்வின் பிற்பகுதியில் டாகடர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி அள்ளி தந்து வள்ளலாகலாம்.
  10. மிகவும் அத்தியாவசியமாக இருந்தாலொழிய யாரும் அருகில் வந்து பேச்சுக் கொடுத்து தொல்லை பண்ன மாட்டார்கள்.
சிகரெட் பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக்கண்டும் சங்கோஜப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை.
புகை பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் 10 புகை பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் 10 Reviewed by Viththiyakaran on 12:39 PM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.