வங்கியல் அறிந்த தமிழன் வாழ்ந்த பூமி இது !

வெருகல் பிரதேச சபைக்கு உட்பட்ட வரலாற்று மூலங்களை தன்னகத்தே கொண்ட முது தமிழ் குடிகள் வாழும் ஈழத் தமிழர் நிலம் புன்னையடி. நம் மூதாதயர்கள் வாழ்ந்த தடங்கள் கொண்ட ஒரு புராதன ஆதாரங்கள் நிறைந்த சிறு குன்றும் அதன் அருகில் அமைந்த கிராமம் புன்னையடி. தமில் எழுத்துக்களாலான கல்வெட்டுக்களும் இடிந்த அகலக் கல், செங்கல் அழிபாடுகளும் புராதன நகர மொன்றின் எஞ்சிய பாகங்களாய் உள்ளன.

மலை நீலி அம்மன் கோயிலும் இங்குதான் உள்ளது. அண்மையில் அந்த கோயிலை இடித்து பெளத்த ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட செய்திகளை நாம் பத்திரிகைகள் மூலம் அறிய முடிந்த கதைகள் பல. ஒரு கோயிலில் கோயிலைச் சூழ உள்ள ஆறு கல் வெட்டுக்கள் செழித்தோங்கிய ஒரு நாகரிகத்தின் குறிப்புக்களாய் காணப்படுகின்றன. அங்கு இயங்கிய வங்கி அமைப்பும் வர்த்தக நாகரிகத்தின் தகவல்களாக மன்னனும் அமைச்சரும் அதன் நிர்வாகமும் தொடர்புபட்ட விடயங்களை பேசுகிறது. கிட்டத் தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரான தமிழ் எழுத்துக்கள் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. 

தமிழ பிராமி எழுத்துக்களுக்கான ம ழ போன்ற எழுத்துக்கள் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.கோயில் குன்றின் உச்சியில் அமைதுள்ளது. அந்த இடத்தில் இருந்து பார்க்கும் போது அனைத்து திசைகளையும் கண்காணிக்க கூடியதாக பரந்திருக்கும் வயல் நிலங்களும் விரிந்து செல்லும் கடலும் இயற்கையின் அழகை எடுத்தியம்பும் ஒரு சூழலை உணர்த்தி நிற்கின்றன. கட்டிட இடிபாடுகள் கோயிலா அல்லது அரண்மனையின் எச்ச சொச்சங்களா என்பதிலும் ஒரு சந்தேகம் நிலவுகிறது.

இதனை ஒரு கோயில் என வைத்துக் கொண்டு பார்த்தால் பழைய செங்கல்கள் எல்லா இடங்களிலும் பரந்து காணப்படுகின்றன. கட்டிடத்தின் மீதமிருக்கும் பகுதி சிதைந்த ஆலய விட்டம், அதன் அடிவாரத்தில் சுமார் 50 அடி உயரத்தில் உள்ளது. பலவகையான செங்கற்கள் கோயிலைக் கட்டியெழுப்ப பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பரப்பளவில் வளைந்திருக்கும் செங்கல் பகுதி ஒரு கட்டிட பகுதியாக இருக்கிறது . செங்கல் வகைகள் 1 ம் நூற்றாண்டின் பிற்கால கட்ட பாணியைக் குறித்து நிற்கிறது. 

செங்கற்களுக்கிடையில் காணப்பட்ட ஒரு தூணின் அடிப்படைக் கல் மற்றும் அழிபாடுகள், கீழே இன்னொரு கட்டிடமும் இருந்ததை யூகிக்க முடிகிறது. பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள ஒரு விமானம், அதன் மேல் நுழைவது தெற்கே அமைந்துள்ளது. கோயிலின் வடக்குப்பகுதி ஒரு செங்குத்தாக உள்ளது.

பாறை மீதுள்ள ஆறு கல்வெட்டுகள் இந்த இடத்தில் காணப்படும் மிக முக்கியமான தொல்பொருள் இடிபாடுகள் ஆகும். அவற்றில் மூன்று, ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன. இந்த கல்வெட்டுகள் அமைந்திருக்கும் பாறகள் மேற்குப் பக்கத்தில் எழுத்துக்கள் அழியும் நிலையில் உள்ளது. தனித் தனி பாறைகளில் அமைந்ததாகவும் தொடர் பாறைக் கல்வெட்டுகளாகவும் அமைந்துள்ளமையயை காணலாம்.
முதல் மூன்று இடங்களில் முதல் கல்வெட்டு எழுத்துகள் ஒப்பீட்டளவில் தெளிவாக இருக்கின்றன. இந்த இடத்தைப் பற்றியும் தங்க நாணயங்கள் இவ்வாலயத்துக்கு கொடையாக கொடுக்கப்பட்டது பற்றிய செய்திகளையும் மகா நாகன் என்ற மன்னன் பற்றிய குறிப்புகளையும் தருகிறது. இது ஒரு மடாலயம் எனவும் ஊகிக்க முடிகிறது. மன்னர் மகா நாகன் பற்றிய கல்வெட்டுகள் (கிமு 9 முதல் 21 வரை), மன்னனின் பெயருடன் கல்வெட்டுகளின் எண்ணிக்கை கடலுக்கு அருகில் கிழக்குப் பகுதியிலுள்ள பல இடங்களில் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் எழுதப்பட்ட பிரதியில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், கடலில் நெருங்கியிருக்கும் கல்வெட்டுகளில் அவர் ‘நாகா மகாராஜா’ என்று குறிப்பிடப்படுகிறார். இது 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கல்வெட்டுக்கு ஏற்ப, ராஜா ஆலயத்தை அருகிலுள்ள நீரேந்து பகுதிகளிலிருந்து நீரைப் பெற்று மக்களுக்கான வயல் நிலங்களை தவிர்த்து இக் கோயிலுக்கு தானமாக ஒரு பகுதி நிலத்தை வழங்கியமையும் தெரிய வருகிறது .மகா நாகன் காலம் கி.மு 9-21 வரை என கல்வெட்டு சான்று பகர்கிறது.

இரண்டாவது கல்வெட்டானது, ராகய்யா என்ற ஒரு அமைச்சர், வங்கியில் ஐந்நூறு தங்க நாணயங்களை கரூவூலத்தில் சேர்த்ததாகவும் அது வர்த்தகத்துக்கு பயன்பட்டதாகவும் சொல்கிறது. ஒரு வங்கி அமைப்பு பற்றியதான ஈழத்தில் கிடைக்க கூடிய முதல் தகவலாக இது உள்ளது. ஒரு வர்த்தக வலையமைப்புக் கொண்ட நகராக புன்னையடி விளங்கியமைக்கு ஒரு சான்றாக இந்த கல்வெட்டு பேசுகிறது.
மூன்றாவது கல்வெட்டு தாடவித என்ற பெயரில் ஒரு வணிக நகரத்தைக் குறிப்பிடுகிறது. மன்னாரில் இருந்த வணிக மையம் பற்றியும். மகாசன் என்ற மன்னன் (276-299) தனது சொந்த நாட்டில் இருந்து விளைந்த நெல் இருப்பை பேணும் களஞ்சியங்கள் கொண்டதாக இருந்த நெல் இருப்பு பற்றி பேசுகிறது.
ஏனைய கல் வெட்டுகள் தங்க நாணையங்களின் சேமிப்பு நெல் களஞ்சியங்கள் கோயில் பராமரிப்பு பற்றியே பேசுகின்றன. எல்லா கல் வெட்டுகளுமே புன்னையடியை அடிப்படையாக கொண்ட செழிப்பான ஒரு தமிழர் பண்பாட்டின் இருப்பை பேசுகின்றவையாகவே உள்ளன.

புன்னையடி நம் மூதாதையரின் சுவடுகளின் வழி வந்த காலடிகளே.

 பால.சுகுமார்
மேனாள் முதன்மையர்,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக் கழகம்.
வங்கியல் அறிந்த தமிழன் வாழ்ந்த பூமி இது ! வங்கியல் அறிந்த தமிழன் வாழ்ந்த பூமி இது ! Reviewed by Viththiyakaran on 9:45 PM Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.