-என்.சரவணன்-
The Veddas “ நூலை சிங்களத்துக்கு மொழிபெயர்த்த சந்திரசிறி ரணசிங்க இலங்கையின் பௌத்த கலைக் களஞ்சியத் தொகுப்புக் குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமுடையவர். 19.04.2012 அன்று லண்டன் பி.பி.சி “சிங்கள சந்தேசய” தொகுத்த நிகழ்ச்சியில் இப்படிக் கூறுகிறார். இலங்கையின் வேடுவர் பற்றி இது வரை இப்படி விரிவான ஒரு நூல் வந்ததில்லை. மார்ட்டின் விக்கிரமசிங்க போன்றோர் மிகவும் போற்றிய நூல் இது. செலிக்மன் அன்று இந்த ஆய்வை செய்யாது போயிருந்தால் நாம் வேடுவர் பற்றிய எஞ்சிய விபரங்களைக் கூட பெறாது போயிருப்போம். சிங்கள மொழியில் நூற்றுக்கணக்கான நூல்களைக் காண முடிகின்றன. ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும் காண முடிகிறது. தமிழில் கட்டுரைகளாகக் காண்பது கூட அரிது.
கடல் வேடுவரை “வெர்தாஸ்” (Verdas) என்றும் அழைக்கப்படுவதை செலிக்மன் குறிப்பிடுகிறார். வேடுவரின் மொழி, நடனம், இசை, மருத்துவம், வாழ்வு முறை, உணவு, தற்காப்பு, தன்னிறைவு, சூழலியல் பற்றிய அவர்களின் கையாளுகை என அனைத்து குறித்தும் செலிக்மன் குறிப்பிட்டுள்ளார். மிகவும் வேகமாக அழிந்துவரும் வேடர் வகை என கடல் வேடுவரைக் குறித்தார் செலிக்மன்.செலிக்மனின் ஆய்வை பின்வந்த பல ஆய்வாளர்களும் கொண்டாடியபோதும் பிரபல மானுடவியலாளரான பேராசிரியர் கணநாத ஒபயசேகர “செலிக்மன் தனது ஆய்வுக்காக போதிய அளவு ’தூய வேடுவர்களை’ சந்திக்கவில்லை’ என்று விமர்சிக்கிறார்.
கடல் வேடுவர்கள் ஒரு காலத்தில் நாட்டின் உட்பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்று சில ஆய்வாளர்கள் எழுதிவைத்திருக்கிற போதும் அதில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று வேறு சில ஆய்வாளர்கள் மறுத்திருக்கிறார்கள்.செலிக்மனின் ஆய்வில் அவர் இலங்கை வேடுவர்களை மூன்று பிரிவினராக வகைப்படுத்துகிறார். கிராமிய வேடுவர், கல் வேடுவர், கடல் வேடுவர் (கரையோர வேடுவர்) என வரையறுக்கிறார்.கிராமிய வேடுவர் ஓரளவு வளர்ச்சியடைந்தவர்கள், காலபோக்கில் எல்லைப்புற கிராமங்களோடு ஓரளவு ஒன்று கலந்தவர்கள். கல் வேடுவர்களும், வேட்டை வேடுவர்களும் செறிவான காடுகளுக்குள் வாழ்பவர்கள். சற்று காட்டுமிராண்டித்தனமான குணமுடையவர்கள். கிராமிய மக்களிடம் இருந்து ஒதுங்கி தனித்து வாழ்ந்து வருபவர்கள் என்று சாராம்சத்தில் கூறுகிறார்.
மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். வட மத்திய மற்றும் சப்பிரகமுவ மாவட்டங்களில் ஆதிவாசிகளின் வாழ்விடங்கள் இன்றும் உள்ளன.
கிழக்குக் கரையோரப் பகுதிகளில் குறிப்பாக மாங்கேணி, பனிச்சங்கேணி, குஞ்சங்கல்குளம், முருத்தனி போன்ற பிரதேசங்களைச் சூழ வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
இவர்களின் பாரம்பரிய ஆதிவாசி மொழி இப்போது சிங்களமும், தமிழும் கலந்ததாக ஆகியிருக்கிறது. எந்த மொழிச் செல்வாக்குள்ள பகுதியை அண்டி வாழ்கிறார்களோ அந்த மொழி அவர்களின் மொழியுடன் கலந்துவிட்டதை யதார்த்தம் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது. அதுபோலத்தான் அவர்களின் இன்றைய பெயர்களும் தமிழ் பிரதேசங்களில் தமிழ் பெயர்களாகவும், சிங்களப் பிரதேசங்களில் சிங்களமாகவும் இருக்கிறது. ஆனால் தமிழையே பெருமளவினர் கலந்து பேசுகின்றனர்.
யுத்தத்தின் காரணமாக தமது வாழ்விடங்களைவிட்டு தொடர்ச்சியான இடப்பெயர்வுக்கு உள்ளான இம்மக்களின் அடையாளம் மீண்டும் தொலைந்து, சாதாரண ஏழை கிராமத்தவர்களோடு கலந்துவிட்டதையும் காணமுடியும். அதிலும் குறிப்பாக தமது பிரதேசங்களை அண்டிய கிராமங்களில் வாழ்ந்த விளிம்பு நிலை சமூகத்தினரோடு (குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியினரோடு) திருமணமாகி கலந்துவிட்டதையும் காண முடியும்.
966 காலப்பகுதிகளில் காட்டு மரங்களை வெட்டுவதை அரசாங்கம் தடை செய்ததுடன் சில வேடுவர் வாழ்விடங்களில் வாழ்ந்த வேடுவக் குடும்பங்களை கிராமங்களில் கொண்டுவந்து குடியிருக்கச் செய்துள்ளனர். சமீபத்தில் roar இணையத்தளத்திற்காகான மட்டக்களப்பு கடல்வேடுவர் பற்றிய கட்டுரைக்காக இந்துனில் உஸ்கொடவத்த பல விபரங்களை சேகரித்து வந்திருக்கிறார். செலிக்மனின் நூலில் குறிப்பிட்ட பிரதேசங்கள் உட்பட பின்னர் அவர்கள் இடம்பெயர்ந்த இடங்களுக்கும் அவர் சென்று விபரங்கள் சேகரித்திருக்கிறார்.
அவர் தற்போதைய கடல்வேடுவர் தலைவராக அறியப்படும் நல்லதம்பி வேலாயுதம் அவர்களை மதுரங்குளம் பிரதேசத்தில் இருக்கும் குஞ்சன்குளம் கிராமத்திற்கு சென்று சந்தித்து எடுத்த பேட்டியில் வேலாயுதம் ஓரிடத்தில் இப்படி குறிப்பிடுகிறார்.
“…சிறு குடிசைகளை அமைத்து இங்கு வாழ்ந்து வந்தோம் யுத்த காலத்தின் போது அடிக்கடி இங்கிருந்து ஓட நேரிடும். பின்னர் வந்து பார்த்தால் யானைகள் எமது இருப்பிடத்தை முற்றாக சிதைத்திருக்கும். இப்படி அடிக்கடி நேர்ந்த நிலையில் அரசாங்கம் எங்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்தது. இப்போது இந்த கிராமத்தில் “கலக்காத” (தூய) வேடுவ குடும்பங்கள் 64 உள்ளன. அருகில் உள்ள கிரிமிச்சை என்கிற கிராமத்தில் “கலக்காத வேடுவக் குடும்பங்கள் 95 உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் வேடுவக் குடும்பங்களைக் கொண்ட 22 கிராமங்கள் உள்ளன.”
கல்விப் பொதுத் தராதரம் வரை கற்ற ஒருவரும் தமது கிராமத்தில் இல்லையென்றும் வேலாயுதம் தெரிவிக்கிறார். மாதமொருமுறை மட்டக்களப்பிலிருந்து வைத்தியர் வந்து விட்டு செல்வார் என்றும், அவரச தேவைகளுக்கு வாகரை அல்லது வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு செல்வதாகவும், தமது கிராமத்துக்கு தினசரி ஒரு தடவை மாத்திரமே பஸ் வந்து செல்கிறது என்கிற விபரத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
“இந்த கிராமத்தில் வாழும் சில ஆதிவாசிகள் சற்று வசதிகள் வந்ததும் அவர்கள் தம்மை ஆதிவாசிகளாக அடையாளம் காட்டுவதை தவிர்த்தே வருகிறார்கள். பதிலாக தமிழர்கள் என்றே அடையாளப்படுத்துகிறார்கள். முன்னெரெல்லாம் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் “இலங்கை வேடுவர்” என்றே பதிந்தவர்கள் இப்போது இலங்கைத் தமிழர் என்று பதிகின்றனர். இந்த சிக்கல் குறித்து கொழும்பிலும் நாங்கள் கதைத்திருக்கிறோம்” என்று வேலாயுதம் குறிப்பிட்டுள்ளார்.
மீன் பிடித்தல், தேன் சேகரித்து வருதல், சிறு பயிர்ச்செய்கை, நெற்பயிர்ச்செய்கை, சந்தைக்கு தேவையான சிலவற்றை தயாரித்தல் என்பவற்றை செய்து வந்தபோதும் கூலித் தோழிலில் இப்போது அதிகம் ஈடுபடுகிறார்கள்.தமிழ் பெரும்போக்குக்குள் இவர்களை உள்ளிளுக்காத போக்கு தொடரவே செய்கிறது. ஒரு சாரார் தமிழ் மக்களுடன் கலந்து தமிழ் அடையாளத்துக்குள் இழுக்கப்பட்டுவிட்டபோதும் இன்னொரு சாரார் தமது சுய அடையாளங்களுடன் வாழ வழிவகுக்கும் செயற்திட்டம் தமிழ் அரசியல் சக்திகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை.2014இல் வாகரையில் ஆதிவாசிகள் தினத்தின்போது கடல்வேடுவர்களும், சிங்கள பிரதேசங்களில் வாழும் “வன்னிய எத்தோ” எனப்படும் வேடுவரும் ஒன்றாக சந்தித்து கொண்டாடியிருந்தனர்.
தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு 2017 யூன் மாதம் “இலங்கையின் மக்கள்” என்கிற ஒரு நூலை வெளியிட்டிருந்தது. 381 பக்கங்களைக் கொண்ட அந்த பெரிய நூல் இலங்கையர்களின் மொழியில் வெளியிடப்படாதது துரதிர்ஷ்டவசமானது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டவேளை அது விரைவில் சிங்கள, தமிழ் மொழிகளில் கிடைக்கும் என்று அறிவிக்கபட்டிருந்தாலும் இன்று பத்து மாதங்கள் கடந்தும் அது நிறைவேற்றப்படவில்லை. அந்த நூலில் இலங்கையில் 19 இனக் குழுமங்களை அடையாளங்கண்டு அவர்களைப் பற்றிய சிறந்த கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. அதில் ஒன்று கடல் வேடுவர் பற்றியது. அந்த சிறந்த கட்டுரையை எழுதியிருப்பவர் இலங்கையில் விளிம்புநிலை மக்கள் பற்றிய ஆய்வுகளை தொடர்ச்சியாக செய்துவரும் பேராசிரியர் காலிங்க டியூடர் சில்வா.
செங்கலடி கிராசேவைப் பிரிவுக்குட்பட்ட முருத்தனி கிராமத்தைச் சூழ 250 கடல் வேடுவக் குடும்பங்கள் வாழ்ந்துவருவதாக அங்கு 2016 இல் சென்று ஆய்வுகளை பேராசிரியர் காலிங்க டியூடர் சில்வா குறிப்பிடுகிறார்.
அருகிவரும் வேடுவர் இனத்தின் மத்தியில் தமது சுய அடையாளப்பேணல் என்பது இனிவரும் காலங்களில் போதிய அளவு சாத்தியங்கள் இல்லை என்று உணரத் தொடங்கியிருக்கிறது. தமது “வேடுவ” அடையாளம் அவமானமாக பார்க்கும் ஒரு சந்ததியும் கூடவே தழைக்கத் தொடங்கியிருக்கிறது. அவர்களின் வாழ்வியல் முறைமைகள் முற்றிலும் வேகமாக மாறுபட்டு வருகிறது. தலித் மக்கள் தம்மீதான ஒடுக்குமுறையிலிருந்தும் அவமானத்திலிருந்தும் மீள்வதற்காக ஓடி ஒளிந்து தமது சுய அடையாளங்களை மறைத்து வாழத் தலைப்பட்டது போல ‘வேடுவ” சமூகத்துக்கு இல்லை. வேடுவ சமூகத்துக்கு தீண்டாமையும் இருந்ததில்லை.
ஆனால் அவர்கள் இன்று எதிர்கொள்ளும் பண்பாட்டு அடையாள நெருக்கடி நவீன வாழ்வாதாரத்தோடும் சம்பந்தப்பட்டது. அவர்கள் அவர்களாகவே சுமரியாதையுடன், இறைமையுடனும் வாழ வழிசெய்யும் கட்டமைப்பு இலங்கையில் இல்லை. அதற்கான சாத்தியங்களும் கேள்விக்குரியதே. இன்று அம்மக்களைத் தேடிச் செல்வது “உல்லாசப் பிரயாண” நிகழ்ச்சி நிரலின் அங்கமாக ஆகியிருக்கிறது. மிருகக் காட்சிச் சாலைக்கு சென்று மிருகங்களைக் கண்டு பூரிப்பதற்கு ஒப்பானது போல ஆகியிருக்கிறது. பலர் செலிக்மன்கள் அவர்களைத் தேடிச்சென்றுகொண்டிருக்கிறார்கள். இலங்கையில் எஞ்சியுள்ள இறுதி ஆதிக்குடிகள் கண் முன்னால் தொலைந்துகொண்டிருக்கிறார்கள்.
கோரளைப்பற்றிலுள்ள வடக்கிலுள்ள 12 கிராம சேவைகள் பிரிவுகளில் வாழும் கடல் வேடுவர் பற்றி கோறளைப்பற்று வடக்கு கிராமசேவைப் பிரிவினால் 2015 வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்து.
யார் அந்த கடல்வேடுவர் ? இப்போது எங்கே ?
Reviewed by Viththiyakaran
on
8:12 AM
Rating:
