1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்குவதற்கும், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான புதிய சட்டக் கட்டமைப்பைக் கொண்டு அதனை பிரதியிடுவதற்குமாக "பயங்கரவாத தடுப்பு சட்டமூலம்”22 மார்ச் 2023 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. சட்டமூலத்தின் சுருக்கமான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
பயங்கரவாத தடுப்பு சட்டங்களின் வரலாறு
இலங்கையில், பயங்கரவாதம் தொடர்பான ஆரம்ப சட்ட ஏற்பாடுகள் 1947 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதுடன், இது பயங்கரவாத தடுப்பு சட்டம் அல்லாது, மாறாக தேசிய அனர்த்தம் அல்லது பாரிய விபத்து போன்ற சூழ்நிலைகளை கையாள்வதற்காக நிறைவேற்றுனர்களுக்கு தற்காலிகமாக மேலதிக அதிகாரங்களை வழங்கும் சட்ட கட்டமைப்பாகும்.
இது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லையென்றாலும், பயங்கரவாதச் செயல்கள் என அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்படும் செயற்பாடுகளைத் தடுப்பதற்கும், அந்தச் செயல்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கும் அவசரகாலச் சட்டம் உறுதுணையாக இருந்தது. அந்த அமைப்புகளைத் தடை செய்வதற்கு அவசரகாலச் நிலைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன.
1971 இல், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசர நிலையைப் பிரகடனம் செய்வதன் மூலம் கிளர்ச்சியை ஒடுக்குவதற்குபொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
1978 ஆம் ஆண்டு, வடக்கு மாகாணத்தில் கிளர்ச்சி நடவடிக்கைகள் அதிகரித்த போது, நாடாளுமன்றம் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க தடைச் சட்டத்தை நிறைவேற்றி, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதையொத்த பிற அமைப்புகளை தடை செய்தது. இலங்கையின் வரலாற்றில் நிறைவேற்றப்பட்ட முதலாவது பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்று இதனைக் கூறலாம்.
பின்னர் ஜூலை 1979 இல், 1978ம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) நிறைவேற்றப்பட்டதுடன், இது முன்னர் குறிப்பிடப்பட்ட சட்டத்தை ரத்து செய்தது. இந்த தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் மூன்று வருட காலத்திற்கு இயற்றப்பட்டாலும் இன்றுவரை அமுலில் உள்ளது. 1982ல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிரந்தரமாக்கப்பட்டது.
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக விதிகள்) சட்டத்திற்கு எதிரான விமர்சனம்
இந்த சட்டமூலத்திற்கான முக்கியமான எதிர்ப்புகள்:
⦁ சட்டத்தின் கீழான குற்றங்களை மிகவும் பரந்த அளவில் விபரிக்க முடியும் என்பதால், பொதுச் சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நிலைகளில் கூட பாதுகாப்புப் படைகள் குடிமக்களை ஒடுக்குவதற்கு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தலாம்.
⦁ ஊடகத்துறையை கட்டுப்படுத்தும் நடைமுறையிலுள்ளஏற்பாடுகள் பேச்சு சுதந்திரத்தை கடுமையாக கட்டுப்படுத்துகிறது.
⦁ ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அல்லது உயர் பொலிஸ் அதிகாரியிடம் அளிக்கப்படும் வாக்குமூலம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரமாகப் பயன்படுத்தப்படலாம்.
⦁ கைது செய்யப்பட்ட நபரை 18 மாதங்கள் வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்க பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரம் உள்ளதுடன் அதனை நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது.
⦁ வழக்குகள் முடிவடையும் வரை ஜாமீன் வழங்க அதிகாரம் இல்லாமை. இதன் காரணமாக வழக்கு தொடரப்படாத பலர் இன்னமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment