கட்டிளமைப்பருவத்தில் பாடசாலையில் கல்விகற்கும் ஒரு மாணவன் எதிர்கொள்ளும் தேர்வுகளில் ஒன்று நுழைவாகவும் மற்றையது வாழ்க்கை தேர்வாகவும் அமைகின்றன.
கல்விப் பொதுதராதர சாதாரண தரம் உயர்தரத்துக்கான நுழைவாகவும் உயர்தர பரீட்சைகள் வாழ்க்கை தேர்வாகவும் அமையப் போகின்றன. இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றில் பாடசாலைக் கல்வி, பல்கலைக்கழக கல்வி,தொழில்நுட்பக்கல்வி, கல்வியியல் கல்லுரி, ஆசிரியர் பயிற்சி கலாசாலை, தாதியர் கல்லூரி என்பன இலவசம். இவை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, நடுத்தர வருமானமுள்ள குடும்பங்களிற்கு மிகப்பொருத்தமான பயனுடைய இடையீடாகும். பல அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளிலும், மேற்கத்தைய நாடுகளிலும் இவற்றை பணம் கொடுத்துத்தான் பெற்றாகவேண்டும்.
தரப்படுத்தல்கள், சமவாய்ப்பு அளிக்கப்படாமை, பாகுபாடு என்பன குறித்து சிறுபான்மையினர் குறைபட்டுக் கொண்டாலும் பெரும் தொகையாக உயர்நிலையில் இருக்கின்றவர்கள் அரசாங்க இலவச கல்விச் செயற்பாடுகள் ஊடாகவே அந்த நிலையை அடைந்துள்ளனர் என்பதை மறுக்கவில்லை. அரச பல்கலைக்கழகங்களுக்கு வெளியே இவற்றை அதிக செலவில்தான் கற்கமுடியும்.
பாடசாலைப் பரீட்சைகள்:-
கல்விப்பொதுத்தராதர சாதாரண தரத்திற்கான ஆயத்தப்படுத்தல் ஆண்டு ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய மூன்று வகுப்புகளில் நடக்கின்றன. கட்டிளமைப்பருவ மாற்றங்களும் இவ்வயதிலேயே ஆரம்பமாகின்றன. இங்கு வகுப்பறைச் செயற்பாடுகள், பிரத்தியேக வகுப்புக்கள் என்பவற்றுடன் மாணவனின் சுயகற்றலும் மிக முக்கியமானது. ஒன்பது பாடங்களையும் சரியான முகாமைத்துவத்தில் கற்று வருகின்ற ஒரு மாணவனால் பரீட்சையை சரியாக எதிர்கொண்டு உயர்தரத்திற்கு பூரணதிருப்தி,சந்தோசம் மற்றும் உற்சாகத்துடன் நுழைய முடியும்.
உயர்தர பாடத்தேர்வு:-
கலை, வர்த்தகம், உயிரியல், கணிதம் அத்துடன் தொழிநுட்பம் ஆகிய ஐந்து துறைகள் உயர்தரத்தில் உண்டு. சிறுவயதுமுதல் ஒரே இலக்குடன் படிக்கின்ற மாணவனிற்கு தனது உயர்தரத்துக்கான துறையை தெரிவு செய்வது கடினமாக இருப்பதில்லை. அம்மாணவன் தனது விருப்பத்தை பெற்றோர், ஆசிரியர், உறவினரின் ஆசீர்வாதத்துடன் தொடர்கிறான். மாறாக பெற்றோரின் நிர்பந்தத்திற்கு அமைய உயர்தர பிரிவை, தெரிவு செய்யும் மாணவன் விருப்பமில்லாததொன்றை தேர்வு செய்ய நேரிட்டால், விரைவாக களைப்புற்று மனச்சோர்வு, நெருக்கீட்டு விளைவு,தற்கொலை முயற்சிகள், பரீட்சை தோல்விகளுடன் ஒதுங்கி போவதை காண்கிறோம்.
பொறுப்புள்ள பெற்றோர் தங்கள் கண்ணியம், குடும்ப கௌரவம் என்பவற்றிற்கு அப்பால், தமது பிள்ளையின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் விருப்பத்திற்கு இசைந்து கொடுப்பது கட்டிளமைப்பருவ சிக்கல்களில் இருந்து மாணவர் விடுபட உதவும்.
சில வேளைகளில் மாணவர்கள் சில பாடங்களில் சித்தியடைவதற்கு அல்லது பொருத்தமான முடிவைப் பெற முதல்தடவையில் முடியாமல் போகலாம். பொறுப்புள்ள அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்களின் பெறுபேறுகளிற்கு அமைய அவர்கள் உயர்தரம் கற்பதற்கான சந்தர்ப்பத்தையும், பரீட்சை எழுதுவதற்கான சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மாறாக ‘சுற்று நிருபங்கள்‘ என்ற வரையரைக்குள் உள்ளடங்காத விடயங்களையும்,உள்ளடக்கி மாணவர்கள் உயர் கல்வியில் புறகணிப்புக்களை எதிர்கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வருடம் உயர்வகுப்பு கலைப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்காத நிலையில் மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு வவுனியாவில் உள்ள பாடசாலையில் நடந்ததை மீண்டும் ஒரு தடவை நினைவில் கொள்வது பொருத்தமானது.
சுற்று நிருபத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் ஒரு மாணவிக்கு உயர்தர கல்வியை ஆசிரியர்கள் மறுத்த சம்பவம் ஒன்றில் நாம் தலையிட்டதால், அந்த மாணவிக்கு கல்வியை தொடர வாய்ப்பு கிடைத்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் நடந்தது. அந்த மாணவியின் விடயத்தில் எமது தலையீடு இல்லாது போயிருந்தால், அந்த மாணவியின் பெற்றோருக்கு போதிய கல்வி அறிவு இல்லாத சூழ்நிலையில், ஆசிரியர்களின் புறக்கணிப்பால் அந்த மாணவி கல்வியை இடைநிறுத்த நேர்ந்திருக்கும்.
பரீட்சைக்கு தயார்ப்படுத்தல்:-
கட்டிளமைப்பருவத்தினர் கல்வி கற்கும் முறையும் சரியான நேர அட்டவணை, பாடங்களிற்கு கொடுக்கும் முக்கியத்துவம், சுயகற்றல்,கடந்தகால பரீட்சை வினாக்களை சரியான நேரத்திற்குள் செய்வது,துரித மீட்டல், சேர்ந்து கற்றல் என்பனவும் பரீட்சைகளை நல்ல முறையில் எதிர்கொண்டு, எதிர்ப்பார்க்கின்ற பெறுபேற்றை அடைவதற்கு ஏதுவாக அமைகின்றது.
அடுத்துவரும் இரண்டு மாணவர்கள் பரீட்சைக்கு தயார்ப்படுத்தும் முறையைக் கொண்டு சரியான வழியை பின்பற்ற உங்கள் பிள்ளைகளிற்கும் வழிகாட்டுங்கள். பலர் அதனை ஏற்றுக்கொள்வார்கள். சிலர் தமது வழியில் சென்று அடுத்த தடவை தமது பிழைகளை உணர்ந்து இரண்டாவது தடவை சரியான வழிக்கு வருவார்கள்.
சம்பவம் (1)
சுதாகரன் ஆண்டு – 11 ல் கல்வி கற்கிறான், அவன் பின்வருமாறு கூறுகிறான்.
‘ஆசிரியர் வகுப்பில் கற்பிக்கும் பாடங்களை முன்வரிசையில் அமர்ந்து கூர்மையாக செவிமடுப்பேன். ஏற்படும் சந்தேகங்களை, பாட இறுதியில் கேட்டு விளங்கிக் கொள்வேன். கற்ற விடயங்களை அன்றைய தினமே ‘அசைபோட்டு‘ மீட்டுக்கொள்வேன். ஒரு சில நாட்கள் கடந்த பின்பு, எனது அறையின் நாற்காலியில் அமர்ந்து அப்பாடங்களை மீண்டும் மனதிற்குள் நினைத்துக்கொள்வேன்,மறந்தவற்றை மீள பக்கங்களைப் புரட்டி ஞாபகப்படுத்துவேன். நான் ஒருபோதும் தொடர்ந்து மணிக்கணக்கில் ஒரே இடத்தில் இருந்து படிப்பதில்லை. நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை படித்து அதன்பின் பத்துநிமிடம் வரை விரும்பிய பாடல்களை கேட்பேன். எனது வகுப்பாசிரியர்கள் மூளை உள்வாங்கும் விடயங்கள், தொடர்ந்து கற்பதால் வரும் விளைவுகளைப்பற்றி கூறியது மிகப்பொருத்தமானது.
நான் மாதாந்தம் போட்டுக்கொள்கின்ற நேரசூசியின் படியே படிக்கிறேன். வீட்டில் உள்ள சிறிய வேலைகள் குசினி வேலைகள்,ஆடை கழுவுதல் போன்ற வேலைகளையும் செய்கிறேன். நான் படிக்கும் பாடங்களில் சுருக்க குறிப்புக்கள் எடுத்தக் கொள்வேன்,பின்பு ஓய்வு நேரங்களில் அவற்றை மீட்டுப்பார்ப்பேன். அத்துடன் எனது நல்ல நண்பருடனும் அவற்றை கலந்துரையாடுவேன். எனக்கு தெரிந்த பாடங்களை, ஏனையோருக்கு சொல்லிக் கொடுப்பேன். அதன் மூலம் அப்பாடங்களை ஞாபகத்தில்வைத்திருக்க முடியும். ஆலயம் சென்று கடவுளை வணங்குகிறேன். ஒவ்வொருநாளும் ஒருமணிநேரம் கிரிக்கெட் விளையாடுகிறேன். காலையில் 30நிமிடங்கள் யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் செய்கிறேன். இதனால் பரீட்சையை குறித்த பயம், பதற்றம் ஒன்றும் எனக்கு இல்லை. சராசரியாக 80 வீதம் புள்ளிகள் ஒன்பது பாடங்களிலும் பெற்று வருகின்றேன். சாதாரண தரத்தில் ஒன்பது பாடங்களிலும் ‘யு‘சித்திபெற்று உயர் தரத்தில் கணிதப்பிரிவில் கற்று விமான பொறியியலாளராக வருவதே எனது கனவாகும்.
பிறிதொரு பெண்கள் உயர்கல்லூரியில் கல்விகற்கின்ற கௌரி,இவ்வருட சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றுகிறாள்,
‘நான் கடந்த இரண்டு மாதமாக பாடசாலை செல்வதில்லை. வீட்டிலேயே இருந்து கற்கிறேன் பெற்றோர் பிரத்தியேக வகுப்புகளை வீட்டிலேயே ஒழுங்குப்படுத்தியுள்ளனர். பகல் முழுவதும் ரியூசன். இரவில் தொடர்ச்சியாக ஆறு மணித்தியாலங்கள் படிக்கிறேன். பொழுதுபோக்கு, நண்பர்கள் மிகக்குறைவு பரீட்சையை குறித்து அதிக பயமாக இருக்கிறது. படித்த பாடங்கள் ஞாபகத்திற்கு வருவதில்லை. சித்தியடைவேனோ என்ற பயம் அதிகமாக உள்ளது. பெற்றோர் வைத்தியராக வரவேண்டும் என்று கூறிக்கொள்கின்றனர். கடவுள் நம்பிக்கையும் குறைவாக உள்ளது. தொடர்ச்சியாக படிப்பதால் தலையிடி, நாரிப்பிடிப்பு ஏற்படுகின்றது, நெஞ்சடைப்பு சிலவேளைகளில் இதயதாக்கு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தையம் ஏற்படுத்துகின்றது. இருந்தும் என்ன பிரயோசனம்? தோற்றுவிட்டால் குடும்ப கௌரவம், பெற்றோரின் எதிர்பார்ப்பு அவர்கள் செலவு செய்த பணம் இவை அடிக்கடி மனதிற்குள் வந்து எனது நிம்மதியை குழப்புகின்றன.
இருவரில் எவரால் பரீட்சையில் நல்ல முடிவை பெற முடியும் என்பதை நீங்களே ஊகியுங்கள்.
டாக்டர் . ஜூடி ரமேஸ் ஜெயக்குமார்,சிரேஷ்ட உளநல மருத்துவர்
வயதுக்கு வரும்போது இதில் பெரிய மாற்றம் ஏற்கின்றதாம்மே !
Reviewed by Viththiyakaran
on
12:00 PM
Rating:
