மட்டும் ஓடுதளமும் ஓர் வரலாற்று பார்வையில்


நமது மட்டு மண்ணில் அமையப்பெற்ற; தற்போது குறுகிய காலத்தில் பாரிய அளவில் பேசப்பட்ட, பகிரப்பட்ட மிக முக்கிய இடமான இலங்கை விமானப்படைத்தளங்களில் ஒன்றே இது என நம்மில் பலராலும் அறியப்பட்டிருந்த திமிலைத்தீவில் அமைந்துள்ள ஓடுதளத்தை பற்றி சற்று வேறு கோணத்தில் அலசலாம்.


நம்மில் பலரும் வவுணதீவு நோக்கி மட்டு நகரிலிருந்து செல்லும் போது நம் சிறுவர்களுக்கு நாம் சொல்லும் விடயம் மகனே/மகளே இதுதான் மட்டக்களப்பு air force. காரணம் நாம்  பலரும் இதுவரை காலமும் அறிந்திருந்தது அவ்வாறே. ஆனால் இது அமைக்கப்பட்டதற்கான காரணம் இலங்கையில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யவும் அம்பாறை, திருகோணமல, பொலன்னறுவை போன்ற பிரதேசங்களுக்கான சர்வதேச போக்குவரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் இது அமைக்கப்படவுள்ளது என அக்கால Civil Aviation திணைக்களத்தின் இயக்குனர் Daily News பத்திரிகைக்கு கூறியதாக 1958 ஜுன் 11ம் திகதி வெளிவந்த Ceylon Observer பத்திரிகையில் காணக்கூடியதாக உள்ளது.

17ம் திகதி நொவெம்பர் மாதம் 1958ல் ஆரம்பிக்கப்பட்டு பத்து வருடங்களுக்குப் பின்னர், இரத்மலானை மற்றும் யாழ்ப்பாண விமான நிலையங்களுக்கு இடையே இயக்கப்பட்ட Air Ceylon விமானச்சேவை மட்டக்களப்பு விமான நிலையத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டது.

Air Ceylon 29 ஆசனங்கள் உடைய நார்த்(Norde) விமானத்தை (பிரெஞ்சு தயாரிப்பு) பயன்படுத்தி கல்ஓயா (அம்பாறை) வழியாக மட்டக்களப்புக்கு தினசரி விமானங்களை இயக்கியது. இரத்மலானையிற்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான விமானம் போக்குவரத்திற்கு 75 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஏர் சிலோன் நிறுவனமானது அரச ஊழியர்களுக்கான வருடாந்தம் வழங்கப்படும் மூன்று புகையிரத ஆணைச்சீட்டிற்கு பதிலாக உள்ளூர் விமான சேவையை ஒரு முறை பயன்படுத்துவதற்கான முறைமையை அறிமுகப்படுத்தியிருந்ததுடன், அநேகமானோர் இதன்மூலம் விமான பயணத்தின் அரிய அனுபவத்தை பெறும் வாய்ப்பை அனுபவித்தனர்.

எனினும் 1979 ஆகஸ்ட் 31இல் ஏர் சிலோன் நிறுவனம் நெருக்கடியை சந்தித்ததனால் திட்டமிடப்பட்ட விமானச்சேவைகளின் செயற்பாடு நிறுத்தப்பட்டு 1983 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை விமானப்படை விமான நிலையத்தின் செயற்பாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்தது. 1997 ஆம் ஆண்டளவில் விமானப்படை இதனை விரிவுபடுத்தி தமக்கான விமானப்படைத்தளத்தை அமைப்பதற்கான ஒரு திட்டத்துடன் விமான நிலையத்திற்கு அருகில் இருந்த 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியெழுப்பபட்டு அவர்களுக்கான மாற்று நிலம் வழங்கப்பட்டது.

இதன் தற்போதைய அமைவிடத்தை புவியியல் ரீதியாக பார்த்தால் , விமான நிலையம் மட்டக்களப்பு நகரத்திலிருந்து தென்மேற்கு திசையில் 1.7 கிலோமீற்றர் தொலைவில்,கடல் மட்டத்திலிருந்து 3 மீட்டர் (10 அடி) உயரத்தில் திமிலைத்தீவில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு விமான நிலையம் 528,047சதுர அடி(3,497 அடி × 151 அடி)நிலப்பரப்பை கொண்டது. கட்டுநாயக்கவுக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் விமானப் பயணம் 206 கி.மீ உம், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானைக்கு இடையே 220 கி.மீ உம் மட்டுமே.

இலங்கையின் விமானச்சேவையின் 100வருட பூர்த்தியை முன்னிட்டு 2012ஆம் ஆண்டு உள்ளூர் சேவையை அபிவிருத்தி செய்யும் முகமாக மட்டு விமான நிலையத்தை புனர்நிர்மானம் செய்யும் நோக்குடன் 2012 செப்டம்பர் 3ம் திகதி அடிக்கல் நடப்பட்டு, மீள் சீரமைப்பின் பின் 2016 ஜுலை 10ம் திகதி கௌரவ ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இருந்தும் இவ்வருடமே தனியார் பாவனைக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு இலவசமாக தரையிறங்கவும் தறித்து நிற்கவும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது Cinnamon air நிறுவனம் மட்டும் தினசரி இருதடவைகள் மேற்கொள்கின்றது மேலும் ஏனைய சில விமான நிறுவனங்களும் தமது சேவையை வழங்க முன்வந்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
இதன் பாவனை தொடருமெனில் சுற்றுலாப்பயணிகள் தமது பிரயாண நேரத்தை அதிகம் சேமிக்கமுடியும் என்பதுடன் நம்மவர்களுக்கும் இதன் மூலம் அதிக பலன் பெறுவார்கள். மேலும் இவ் விமானப் போக்குவரத்து எதிர்காலத்தில் சாதாரண செயலாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.

மட்டும் ஓடுதளமும் ஓர் வரலாற்று பார்வையில் மட்டும் ஓடுதளமும் ஓர் வரலாற்று பார்வையில் Reviewed by Pavithran Manisegaran on 8:02 AM Rating: 5

Post Comments

Powered by Blogger.