மக்கள் அதிகம் கூடும் இடங்களை தீர்த்தக் கரைக்கு ஒப்பிட்டே பேசுவது மட்டக்களப்பாரின் வழக்கம்.
இங்கு இந்தத் தீர்த்தக் கரை குறிப்பது மட்டுநகரில் அமிர்தகழியில் கோவில் கொண்டுள்ள மாமாங்கப் பிள்ளையாருக்கு வருடாந்தம் பத்து நாட்களுக்கு நடைபெறும் ஆடி அமாவாசைத் திருவிழாவையேயாகும்.
எதிர்வரும் கிழமைகளில் தீர்த்தக்கரையின் திருவிழாவைக் கண்டு மனம் மகிழலாம்,ஆன்மீகத் திருப்தியடையலாம்.
புவியியல் ரீதியாக மட்டக்களப்பின் மையப்பகுதியில் நகரத்தை அண்மித்த அழகிய இயற்கைச் சூழலில் மாமாங்கத் தீர்த்தக் கரையின் அருகில் நிழல் தரும் விருட்சங்கள் நிறைந்த வெண்மணற் பரப்பில் குடி கொண்டு எல்லோரையும் ஈர்க்கும் பெரிய தெய்வமாக மாமாங்கர் அருளாட்சி புரிகின்றார்.
மாமாங்கரை அண்டி வாழும் சமூகங்கள் அனைவரும் மாமாங்கரைப் பெரிய கடவுளாகக் கருதியும் இவ்வாலயத்தைப் பேராலயமாக மனத்தில் வைத்தும் தத்தமது குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளும் ஓர் ஒழுங்கு இப்பிரதேசத்தில் கடைப்பிடிக்கப்படுவதனைக் காண முடிகின்றது.
மாமாங்கத்தைச் சூழவுள்ள பழைய கோவில்கள் எல்லாம் மாமாங்கருக்கு எல்லைக் காவல் புரியும் தெய்வங்கள் என்ற நம்பிக்கை இங்கு நிலவி வருகின்றது. எல்லையில் காவல் புரியும் தெய்வங்களுக்கு விழா நிறைவடைந்ததும் மாமாங்கரின் விழா ஆரம்பிப்பது வழமை.
இவ்வாறு மட்டுநகரின் பேராலயமாக விளங்கி வரும் மாமாங்கப் பிள்ளையார் கோவிலின் வருடாந்தத் திருவிழாவில் வருடா வருடம் மட்டக்களப்பில் வாழும் பல்வேறு இன மக்களும் ஒன்று கூடுகின்றனர்.
சமயக்கடமை, பக்தி, நம்பிக்கை, வியாபாரம், விளம்பரம், வணிகம், பொழுது போக்கு, மகிழ்ச்சி எனப் பல்வேறு நோக்கங்களுடன் பல்லின மக்களும் தீர்த்தக் கரையினில் ஒன்று கூடுகின்றனர்.
மிகப்பெரும்பாலும் இங்கு சேருகின்ற மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுவதாகவே இருந்து வருகின்றது. இதனால்தான் தீர்த்தக்கரை தலைமுறைகள் கடந்தும் தொடர்கின்றது எனலாம்.
குறிப்பாக மட்டக்களப்பின் உள்@ர் உற்பத்திகளுக்கான பெறுமதியான சந்தை வாய்ப்பை தீர்த்தக்கரை வழங்கி வருகின்றது.
மட்டக்களப்பின் குடிசைத் தொழிற்துறையாகவுள்ள மட்பாண்ட உற்பத்திகள், பிரம்பு மற்றும் பனையோலை உற்பத்திகள் எனபவற்றைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை தீர்த்தக்கரை பொது மக்களுக்கு வழங்கி வருகின்றது.
இதுமட்டுமல்லாது பலநூறு குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்திற்கான முதலீடுகளைப் பெருக்கிக் கொள்ள தீர்த்தக்கரை களம் அமைக்கின்றது.
அதாவது நாளாந்தம் உணவுப் பண்டங்கள் செய்து அவற்றை விற்று வாழும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களும் , நாளாந்த உழைப்பில் வாழும் குடும்பங்களும் தீர்த்தக் கரையில் சில ஆயிரங்களைச் சம்பாதித்துக் கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
அதாவது பாலப்பம், பிட்டு ஆகிய உணவு விற்பனை தீர்த்தக் கரையில் சிறப்பிடம் பெறுகின்றன. குடும்பம் குடும்பமாக வந்து தீர்த்தக்கரையில் அமர்ந்திருந்து பிட்டும் கறியும், அப்பமும் சீனியும் சாப்பிடுவது நாவிற்கு ருசியானதாகவும், மனதிற்கு மகிழ்வானதாகவும் அமைந்திருக்கும்.
உழைத்து வாழுவோருக்கு உதவுவதாகவும் அமைந்திருக்கும். இத்துடன் இப்போது தீர்த்தக்கரையில் மட்டக்களப்பின் பாரம்பரிய நிகழ்த்து கலைகளின் ஆற்றுகைகள் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரால் மாமாங்க வண்ணக்குமாரின் ஆதரவுடன் சிறப்பாக நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பின் பல்வேறு கிராமங்களிலும் கூத்துக்களை ஆடி வரும் கலைஞர்கள் தீர்த்தக் கரைக்கு வந்து கூத்தாடி தாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்வித்துச் செல்லும் செயல் மட்டக்களப்பின் பண்பாடுகளுக்கேயுரிய தீர்த்தக்கரையின் தனித்துவத்தை வெளிக்காட்டி நிற்கின்றது.
இவ்வாறு எல்லா மனிதர்களையும் மகிழ்வித்து வாழ்விக்கும் வகையில் அருளாட்சி புரியும் அமிழ்தகழி மாமாங்கரை
வணங்கி அவர் விழாவில் மகிழ்வெய்துவோம்.சுதா சந்திரன்
தீர்த்தக்கரை ' எனும் சொல் மட்டக்கள்ப்பில்
Reviewed by Viththiyakaran
on
10:56 AM
Rating:
No comments:
Post a Comment